• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தலைச்சிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா இழந்துள்ளது… பிரதமர் மோடி இரங்கல்

ByP.Kavitha Kumar

Dec 27, 2024

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மத்திய அரசு சார்பில் ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் கடந்த 2004 முதல் 2014 வரை இந்தியாவின் 13-வது பிரதமராக பதவி வகித்தவர். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மன்மோகன் சிங் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், இந்தியா தனது தலைச்சிறந்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது. அவர் எளிமையான இடத்தில் இருந்து மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். நிதி மந்திரி உட்பட பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றிய அவர், பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார்.
நாடாளுமன்றத்தில் அவர் செய்த தலையீடுகளும் புத்திசாலித்தனமாக இருந்தன. நமது பிரதமராக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார். மன்மோகன் சிங் பிரதமராகவும், நான் குஜராத்தின் முதல்வராகவும் இருந்தபோது நானும் அவரும் அடிக்கடி உரையாடினோம். ஆளுகை தொடர்பான பல்வேறு விஷயங்களில் நாங்கள் விரிவான விவாதங்களை நடத்துவோம். அவருடைய ஞானமும் பணிவும் எப்பொழுதும் தெரியும். துக்கமான இந்த நேரத்தில், எனது எண்ணங்கள் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர், அவரது நண்பர்கள் மற்றும் எண்ணற்ற அபிமானிகளுடன் உள்ளன என பதிவிட்டுள்ளார்.