மதுரை சோழவந்தான் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வந்த தேனி எம்பி தங்க தமிழ்ச் செல்வன் மற்றும் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ ஆகியோரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி நாடாளுமன்ற எம்பி தங்க தமிழ்ச்செல்வன் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட மேலக்கால் பகுதியில் இன்று மதியம் நன்றி தெரிவிக்க சென்ற போது அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என தங்க தமிழ்ச்செல்வன் எம்பி மற்றும் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலக்கால் பகுதியில் உள்ள காங்கிரஸ் மூத்த நிர்வாகி தங்க தமிழ்ச்செல்வன் எம்பி இடம் திமுகவினர் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. தெரிவித்திருந்தால் காங்கிரஸ் தொண்டர்களையும் அழைத்து வந்திருப்போம். எந்த ஒரு தகவலும் எங்களுக்கு தெரிவிப்பது இல்லை. இப்படி இருந்தால் நாங்கள் எப்படி வேலை பார்ப்பது
தேனி தொகுதியில் நீங்கள் ஜெயிப்பதற்கு காங்கிரஸும் ஒரு காரணம் இனியாவது காங்கிரஸ் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் முறையாக அழைக்க வேண்டும் என கூறினார்.
உடனே அங்கிருந்த திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சமாதானப்படுத்தம் என்றனர்.
மேலும் இது குறித்து எம்எல்ஏ வெங்கடேசன் கூறும்போது, ஒன்றிய செயலாளர் இடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார். உடனே அங்கிருந்த திமுக நிர்வாகிகள் காங்கிரஸ் நிர்வாகியிடம் மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நன்றி சொல்ல வந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே திமுகவின் கூட்டணிக் கட்சியினர் தமிழகம் முழுவதும் திமுகவிற்கு எதிர்ப்பான மனநிலையில் இருந்து வரும் நிலையில் தற்போது தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் நன்றி சொல்ல வந்த இடத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.