தேவகோட்டை அருகே நீர்வழிப் பாதையை அரசு விதிமுறையை மீறி தனியாருக்கு பட்டா வழங்கியதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்து, விதிமுறை மீறி வழங்கப்பட்ட பட்டாவை ஆய்வு செய்து ரத்து செய்யவும் கோரிக்கை தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே குசவந்தான்வயல் கிராமத்தில் உள்ள கண்மாய் கரை, நீர் வழிப்பாதை, மயானக் பாதை ஆகியவற்றை விதிமுறையை மீறி தனியாருக்கு பட்டா வழங்கியதை கண்டித்து கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களும் அரசு அதிகாரிகளிடமும் மனுக்களும் அளித்து வந்த நிலையில், இறுதி முயற்சியாக மீண்டும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில் விதிமுறையை மீறி தனியாருக்கு வழங்கிய அரசு இடத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மனு அளித்தனர். மேலும் அந்த பட்டா வழங்கிய இடத்தில் வேலி அமைத்துள்ளதால் விவசாய நிலத்திற்கு செல்ல முடியாமலும் கண்மாய்க்கு செல்லும் தண்ணீர் தடைபடுவதாகவும், மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.






