திருப்பதி லட்டு விவகாரத்தில் ஒரு நேர்மையான விசாரணை தேவை, மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அரசியலை தவிர்ப்பது நன்றாக இருக்கும் என சிவகாசியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறினார். தமிழகத்தில் தனிக் கட்சியாக எந்த ஒரு கட்சியும் வெற்றி பெற முடியாத ஒரு சூழல் உருவாகி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சிவகாசியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவ மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக்க தாகூர் ..,
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஒரு நேர்மையான விசாரணை தேவை, மத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அரசியலை தவிர்ப்பது நன்றாக இருக்கும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்று, 2024 தேர்தலில் மக்கள் அதை நிராகரித்தனர். அதனால்தான் 303 இடங்களாக இருந்த பா.ஜ.க எம்.பி., க்களை 240 ஆக மக்கள் குறைத்தனர். அரியானா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட இடங்களில் தனியாக தேர்தல் நடத்துவதற்கு என்ன காரணம், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெளிவேஷம் மட்டுமே என்றார்.
இந்தியா கூட்டணியை பொறுத்தவரை மத்திய அரசுக்கு எதிராக அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். வெறுப்பு அரசியலுக்கு எதிரான ஒரு நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் தனிக்கட்சியாக எந்த ஒரு கட்சியும் வெற்றி பெற முடியாத ஒரு சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை ஆட்சி, அதிகாரத்தில் பங்குபெறும் காலம் கனிந்துள்ளது. கூட்டணியை பொறுத்தவரை ஒத்த கருத்தோடு உள்ளோம். அதேபோல் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற மனநிலை ஏற்பட்டுள்ளது.
உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்பது முதல்வரின் முடிவு. முதல்வரின் முடிவை வரவேற்போம்.முதல்வரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது.