• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஜூன் 26ல் பாராளுமன்ற சபாநாயகர் தேர்தல்

18வது மக்களவையின் புதிய சபாநாயகர் தேர்தல் ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18-வது மக்களவை தேர்தலில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை இடங்களான 272 இடங்களை பா.ஜ.க. பெறவில்லை. 240 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்குதேசம் கட்சியின் 16 எம்.பி.க்கள் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் 12 எம்.பி.க்கள் மற்றும் சில கட்சி எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். மேற்கண்ட 2 பெரிய கூட்டணி கட்சிகளுக்கும் தலா 2 மத்திய அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வருகிற 24-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முதல் 2 நாட்களும் புதிய எம்.பி.க்களின் பதவியேற்பு நடக்கிறது.
புதிய எம்.பி.க்கள் பதவியேற்புக்காக தற்காலிக சபாநாயகரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமிப்பார். இவரது தலைமையில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொள்வார்கள். பின்னர் 18-வது மக்களவைக்கான சபாநாயகர் தேர்தலை தற்காலிக சபாநாயகர் நடத்துவார். இந்த நிலையில் புதிய சபாநாயகர் தேர்தல் வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது. 18-வது மக்களவையின் சபாநாயகர் யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கடந்த 2 முறை பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால் சபாநாயகர் பதவியில் பிரச்சினை ஒன்றும் எழவில்லை. அந்த கட்சியினரே சபாநாயகராக நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு பதவியேற்று இருப்பதால் சபாநாயகர் பதவி மீண்டும் பா.ஜ.க.வுக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சபாநாயகர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் பா.ஜ.க.வோ தங்கள் கட்சியைச் சேர்ந்தவருக்கே வழங்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. அப்படி பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் சபாநாயகராகும் பட்சத்தில் அந்த வாய்ப்பு பெரும்பாலும் முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அதே நேரம் முன்னாள் மத்திய அமைச்சரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் மகளுமான புரந்தேஸ்வரியின் பெயரும் அடிபடுகிறது. இவர் தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு மனைவியின் சகோதரி என்பதால் அந்த கட்சியும் ஒப்புக்கொள்ளும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.