தமிழ்நாட்டில் பாஜக தலைவர் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்ததாக வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழிசை சௌந்தரராஜன், வானதிஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை 118068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 568200 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக அண்ணாமலை 450132 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சிங்கை ராமசந்திரன் 236490 வாக்குகள் பெற்றுள்ளார்.
இங்கே அண்ணாமலை தோல்வி அடைந்த நிலையில் ராஜ்ய சபா வழியாக அண்ணாமலை அமைச்சர் ஆவார் என்று தகவல் வந்தது.
நேற்று இரண்டு டீ பார்ட்டி நடந்தது. ஒன்று என்டிஏ தலைவர்கள், கட்சி தலைவர்கள் பார்ட்டி. இதற்கு அண்ணாமலை சென்றதை வைத்து பலரும் அவர் அமைச்சர் என்று நினைத்தனர். அதன்பின் இன்னொரு டீ பார்ட்டி நடந்தது. இதற்கு அண்ணாமலை அழைக்கப்படவில்லை. இதுதான் உண்மையில் அமைச்சரவை பார்ட்டி. உண்மையில் புதிதாக அமைச்சர்களாக போகும் நபர்கள் கலந்து கொண்ட பார்ட்டி. இதில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை என்றதும் அவருக்கு அமைச்சரவை இல்லை என்பது உறுதியானது.
தமிழ்நாட்டில் இருந்து மீண்டும் எல் முருகன் இணை அமைச்சர் ஆகி இருக்கிறார். தமிழிசை அமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் அமைச்சர் ஆகவில்லை. தலைவர் மாற்றம்; இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவருக்கான பதவிக்காலம் அடுத்த மாதத்தோடு முடிகிறது. இப்படிப்பட்ட நிலையில் அண்ணாமலையின் பதவி என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நான் மீண்டும் தலைவராக வர வாய்ப்பு இருக்கிறது. வாய்ப்பு இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அப்படித்தான் பதவி வகிக்க வேண்டும் என்று இல்லை, என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழிசை, வானதி உள்ளிட்ட சிலர் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு காய் நகர்த்தி வருகிறார்களாம். லோக்சபா தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் பாஜக தோல்வி அடைந்த நிலையில் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
பாஜக தமிழ்நாட்டில் வலிமை இல்லாமல் இருந்தாலும் கட்சி மீது பெரிதாக விமர்சனங்கள் இருக்காது. அமைதியான மிடில் பென்ச் ஸ்டூண்ட் போலத்தான் பாஜக இருந்து கொண்டு இருந்தது. ஆனால் தமிழக பாஜக கடந்த 2 வருடங்களில் பல இடங்களில் வளர்ந்துவிட்டதாக அண்ணாமலை தொடர்ந்து கூறி வந்தார். அப்படி இருக்க அண்ணாமலை மீது இயல்பாகவே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பாஜகவை தூக்கி நிறுத்திவிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் பாஜகவின் தோல்வி காரணமாக அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஜேபி நட்டா அமைச்சர் ஆன நிலையில் தேசிய தலைவர் மாற்றப்படுகிறார். அவருடன் சேர்ந்து தமிழ்நாடு மாநிலத்திற்கும் தலைவர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். அண்ணாமலையா அல்லது வேறு தலைவரா என்பது பற்றிய அறிவிப்பு வரும் என்கிறார்கள்.
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் பதவி யாருக்கு?
