• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஒரு கிராம் தங்கம் ரூ.1000 என கூறி பணத்தை சுருட்டிய பெண் கைது

Byவிஷா

Jun 1, 2024

ஈரோட்டில் உள்ள பிரபல ஏஜென்ஸி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1000 எனக் கூறி பணத்தை சுருட்டியது தெரியவந்த நிலையில், அந்தப் பெண் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கலை அடுத்த காந்திநகரைச் சேர்ந்தவர் சசிகலா. ஈரோட்டில் உள்ள பிரபல ஏஜென்சியான ஸ்ரீ பாலாஜி மார்க்கெட்டிங் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.1000 மலிவான விலையில் வழங்கும் கவர்ச்சிகரமான திட்டம் குறித்து பொதுமக்களிடம் கூறினார். அதுமட்டுமல்லாமல் முதலில் சிலரிடம் வாங்கிய சிறிய தொகைக்கு தங்கக் காசுகளையும் வழங்கியுள்ளார். இதை நம்பி கூலி தொழிலாளிகள், வியாபாரிகள் என பலர் தங்களது சேமிப்பை முதலீடு செய்துள்ளனர். மேலும் இந்த திட்டம் குறித்து தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறி ஏஜெண்டுகள் போல் செயல்பட்டு அவர்களிடம் பணம் பறித்தனர்.
ஆனால் குறிப்பிட்ட கால அவகாசம் கடந்தும், பணத்திற்கான தங்கத்தை தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. டெபாசிட் செய்தவர்களில் பலர் தங்களுக்கு தர வேண்டிய தங்கத்தை கேட்டபோது, சசிகலா உரிய பதில் அளிக்காமல் மிரட்டும் தொனியில் பேசியதாக தெரிகிறது. இதனால் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் டெபாசிட் செய்த 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 13ம் தேதி புகார் அளித்தனர். குறிப்பாக அம்மூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழரசனிடம் மட்டும் 1.16 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், அவரது புகாரின் அடிப்படையில் ராணிப்பேட்டை போலீஸார் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் டி.ஜி.பி. அலுவலகத்தில் பணம் கட்டி ஏமாந்த சிலர் மீண்டும் புகார் அளித்ததால் தலைமறைவாக இருந்த சசிகலாவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலாவின் உறவினர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.