• Sun. Oct 5th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அமராவதி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

Byவிஷா

May 18, 2024

அமராவதி ஆற்றில் இருந்து மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படாமல், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்படுவதாகக் கூறி, விவசாயிகள் அமராவதி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. அதில் தற்போது 37 அடி உயரம் தான் தண்ணீர் உள்ளது. இதிலும் 22 அடி உயரத்துக்கு வண்டல் மண் தான் தேங்கி உள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அணையின் நீர் மட்டம் அதிகரிக்கவில்லை. இதற்கிடையே பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 15-ம் தேதி அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவின்பேரில் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தாராபுரம் நகராட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி கூட்டு குடிநீர் திட்டங்களுக்காக ஆற்றில் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி மே 16-ம் தேதி முதல் வரும் 21-ம் தேதி வரை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளத்தில் உள்ள அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கார்ப்பரேட் தோல் தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஆற்றில் முறைகேடாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறி நேற்று (மே 17) மடத்துக்குளத்தில் உள்ள அமராவதி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.வீரப்பன் கூறியதாவது..,
“அமராவதி பழைய மற்றும் புதிய ஆயகட்டு பாசனத்தில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் அமராவதி அணைக்கு நீர் வரத்து இல்லாமல் போனதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி குடிநீர் தேவைக்காக அமராவதி ஆற்றில் 1000 கன அடி வீதம் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது ஆற்றில் வந்த தண்ணீரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், விவசாய நிலங்களுக்கும் மோட்டார் வைத்து திருடி வருகின்றனர். தனியார் கார்ப்பரேட் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக பொதுப்பணித்துறையினர் செயல்பட்டுள்ளனர்.
அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும். தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கவே ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அமராவதி அணையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று தெரிவித்தார்.