தேனியில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழாவிற்கு அறநிலையத்துறையில் முறையாக பணம் செலுத்தி கடைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருவிழாவை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றது எனவும், லட்சக்கணக்கான பொருட்கள் விற்பனைக்காக வாங்கி வைத்த நிலையில் போலீசாரின் திடீர் கட்டுப்பாட்டால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றன.
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த மாதம் 17 ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி உடன் தொடங்கி வரக்கூடிய 7ம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை எட்டு நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது.
தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லக்கூடிய இந்த திருவிழாவில் மண்பானை, பொம்மை, உள்ளிட்ட சிறு தொழில் வியாபாரிகள் மற்றும் சாலையோர தொழிலாளர்கள் கடைகள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் வீரபாண்டி செயல் அலுவலகத்தில் திருவிழாவில் கடை அமைப்பதற்காக சதுர அடிக்கு ஏற்ப கடை வாடகை செலுத்தி கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் வீரபாண்டி காவல்துறையினர் கடைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி இப்பகுதியில் கடைகளை போடக்கூடாது என அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தொழிலாளர் கூறுகையில் பல ஆண்டுகளாக இப்பகுதியில் கடைகள் அமைப்பதற்கு முறையாக வீரபாண்டி செயல் அலுவலகத்தில் சதுர அடிக்கு ஏற்ப பணம் செலுத்தி ரசீது பெற்று பல ஆண்டு காலமாக விற்பனை செய்து வருகிறோம்,
இந்தாண்டு திருவிழாவிற்காக வீரபாண்டி செயல் அலுவலகத்தில் பணம் செலுத்திய பின்பு பல லட்சம் மதிப்பிலான பொருட்களை வாங்கி விற்பனைக்காக வைத்திருந்த நேரத்தில் போலீசாரின் திடீர் கட்டுப்பாடுகளால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் சாலை ஓரம் கடை அமைப்பதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் நாங்கள் கடை அமைத்துள்ளதால் பொதுமக்கள் எந்த பயமும் இன்றி சென்று வருவதாக தெரிவிக்கின்றனர்.
எட்டு நாட்கள் திருவிழாவிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் வருகை தந்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் விற்பனைக்காக வாங்கி வைக்கப்பட்ட நிலையில் போலீசாரின் செயல் தங்களுக்கு பெரும் மன வேதனையை தருவதாக கூறுகின்றனர்.
எனவே எங்களுக்கு கடைகள் அமைக்கப்பட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.