• Mon. Nov 3rd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கட்சி தாவுகிறாரா ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி

Byவிஷா

Apr 20, 2024

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பல்வேறு சுவராஸ்யங்கள் அரங்கேறிய நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி வாக்களித்து விட்டு, மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் நாட்டை துண்டாட நினைப்பவர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளேன் என பேட்டி அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள செயின்ட் ஜான் போஸ்கோ பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் ஓபிஎஸ் தலைமை வகிக்கும் அதிமுக உரிமை மீட்பு குழுவின் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி தனது வாக்கினை செலுத்தினார். புகழேந்தி: வாக்குப்பதிவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“இந்தியா என்கின்ற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் இந்த நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற திராவிட இயக்கத் தலைவர்களின் வழியில் மதச் சார்பற்ற ஜனநாயகத்தை எப்போதும் போல தழைக்கச் செய்ய இன்று வாக்களித்துள்ளேன்” என பேசினார்.
மேலும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி ஆதரவுடன் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிட்ட நிலையில்,”ஓபிஎஸ் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அந்த வெற்றி மாபெரும் வெற்றியாக இருக்கும்” எனவும் புகழேந்தி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மதச்சார்பற்ற கட்சிக்கு வாக்கு, தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களை குறிப்பிடுவதன் மூலம் பாஜக மீது ஓபிஎஸ் அணியினர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஓபிஎஸ் அணியில் நீண்ட காலமாக பயணிக்கும் பெங்களூரு புகழேந்தி தற்போது தனது வாக்கை செலுத்திய கட்சி குறித்து பேசும்போது மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால் துண்டாட நினைப்பவர்களுக்கு எதிராக எனது வாக்கு இருக்கும் என பேசி இருப்பதன் மூலம் பாஜகவுக்கு எதிராகவே அவர் பேசியிருப்பதாக கூறுகின்றனர்.
அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தே அவர் விலகி எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணையலாம் அல்லது ஏற்கனவே அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி போன்றவர்கள் வரிசையில் பெங்களூரு புகழேந்தியும் திமுகவில் இணையலாம் என அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களாக பேசப்படுகிறது.
இதுகுறித்து விளக்கம் கேட்க பெங்களூரு புகழேந்தியை தொடர்பு கொண்டு பேசிய போது,
நான் திராவிட இயக்க சிந்தனை கொண்டவன், அந்த தலைவர்கள் குறித்து பேசியதை வைத்து பாஜகவுக்கு எதிராக நான் பேசியதாக ஊடகங்கள் கிளப்பிவிட்டுள்ளன. தற்போது வெளியில் இருப்பதால் பேச இயலவில்லை. விரைவில் ஊடங்களை சந்தித்து பேசுவேன்” என்றார்.