• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நாளை தமிழ்புத்தாண்டு : தலைவர்கள் வாழ்த்து

Byவிஷா

Apr 13, 2024

நாளை சித்திரை மாத தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது..,
சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த “தமிழ்ப் புத்தாண்டு’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுகள், முற்றிலும் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டுள்ளன என்பதை மெய்ப்பிக்கும் வகையில், “உலகத் தமிழர்களின் ஒருமித்த உணர்வின்படியும், உளப்பூர்வ விருப்பத்தின்படியும் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திருநாள் என்பதை மீண்டும் உறுதி செய்ததை எனக்குக் கிட்டிய ஒரு பெரும் வாய்ப்பாகக் கருதுகிறேன்” என ஜெயலலிதா கடந்த காலங்களில் தெரிவித்துள்ளதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மலர இருக்கும் ‘குரோதி’ ஆண்டு, எல்லா மக்களுக்கும் அன்பையும் நிறைந்த ஆரோக்கியத்தையும், மிகுந்த சந்தோஷத்தையும், பல்வேறு வெற்றிகளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, உலகம் முழுவதும் வாழும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், எனது நெஞ்சார்ந்த “தமிழ்ப் புத்தாண்டு” நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
செல்வப்பெருந்தகை: உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். நமது கொண்டாட்டத்தில் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மொழியியல் ஆகியவை தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதை தலைமுறை தலைமுறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சமீப காலமாக தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாச்சார, பண்பாட்டின் மீதும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கடுமையான படையெடுப்பை நடத்தி வருகிறது. இதனைத் தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் மூலமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் சீர்குலைவு செயல்கள் நடைபெற்று வருகின்றன.
இதை ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிலுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் எதிர்த்து போராடி வருகின்றன. இத்தகைய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் இருந்து தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.
நேற்றைய தினம் ராகுல்காந்தி, நெல்லை, கோவை பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் போது தமிழர்களின் தொன்மையான நாகரீகம், பண்பாடு, தமிழ் மொழியின் சிறப்பு ஆகியவை குறித்து பெருமையாக பேசியது தமிழ் மக்கள் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்றுள்ளது. தமிழர்களின் தனித்தன்மையை பாதுகாக்க ராகுல்காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வந்தாலும், தமிழ்நாட்டில் நடைபெறும் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி மூலம் மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசால் தமிழர்களின் உரிமைகளும், தன்மானமும் பறிக்கப்பட்டு வருவதை மீட்டெடுக்கவும், தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையிலும் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்.
இந்த குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது. அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ்: வசந்த விழாவையும், இந்திர விழாவையும் வழங்க வரும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
சித்திரை மாதம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் மாதம் ஆகும். காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை முழுநிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர்.
சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகும்.
சித்திரைத் திருநாள் என்றாலே மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்வதும், கொண்டாடுவதும் தான். அதிலும் குறிப்பாக சித்திரை முழுநிலவு நாம் நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே வழங்கும்; நமது வெற்றியை மட்டுமே பறைசாற்றும். ஆனால், சமூகநீதிக்கு எதிரான சக்திகளாலும், சதிகளாலும் நமக்கான சமூகநீதி மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது. 2022 சித்திரை நாளுக்கு முன்பாகத்தான் நமக்கு சமூகநீதி கிடைப்பதற்கு தடையாக இருந்த அனைத்தும் நீதித்துறையின் சுத்தியலால் தகர்த்து எறியப்பட்டன.
உச்ச நீதிமன்றமே பச்சைக்கொடி காட்டியும் உழைக்கும் மக்களுக்கான சமூகநீதி இன்னும் மலரவில்லை. நமக்கான சமூகநீதியை தாமதப்படுத்தலாமே தவிர தடுக்க முடியாது. சமுகநீதிக்கெதிரான சக்திகளை சித்திரை சுட்டெரிக்கும்; நமக்கான சமூகநீதி மிக விரைவில் மலர்ந்தே தீரும். அதற்கான உத்தரவாதத்தை நான் வழங்குகிறேன்.
அதையும் கடந்து தமிழ் மக்களுக்கு அனைத்து வகையான நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்; அனைத்து மக்களின் வாழ்விலும் நெருக்கடிகள் மறைந்து மகிழ்ச்சி நிறைய வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க இச்சித்திரைத் திருநாளில் தமிழர்களாகிய நாம் உறுதியேற்றுக் கொள்வோம்.

அன்புமணி: வாழ்வில் வசந்தங்களைக் கொண்டு வரும் சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. அவ்வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவாகும்.

தை மாதத்திற்கான அனைத்து சிறப்புகளும் சித்திரை மாதத்திற்கும் உண்டு. தமிழர்களின் வாழ்வில் பல நன்மைகளின் தொடக்கமாக சித்திரை மாதம் திகழ்கிறது. சித்திரை வெற்றிகளையே வழங்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. அதை உண்மையாக்கும் வகையில் தமிழர்களின் வாழ்வில் அமைதி, வளம், முன்னேற்றம், மனநிறைவு, வெற்றி, மகிழ்ச்சி, நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தையும் சித்திரைத் திருநாள் வழங்கட்டும் என்று கூறி, உலகம் முழுவதும் சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு எனது உளப்பூர்மான வாழ்த்துகள்.