• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக நாடகமாடுகிறது: எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

Byவிஷா

Apr 4, 2024

நீட் தேர்வைக் கொண்டு வந்த திமுகவே, நீட் தேர்வுக்கு எதிராக போராடி நாடகமாடி வருகிறது என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து கார்னேஷன் திடலில் நடந்த பொது கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் தி.மு.க.,வும் ஆட்சியில் இருந்த போதுதான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவை மீட்டெடுப்பதற்காக ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். கச்சத்தீவை மீட்டெடுக்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். கச்சத்தீவு பிரச்சினையை 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு விட்டது பா.ஜனதா அரசு. கச்சத்தீவை மீட்பதற்காக போராடிக்கொண்டிருந்த ஒரே கட்சி அ.தி.மு.க.,தான். மீனவர்கள் சிறைபிடிக்கும் போது மீனவர்கள் பற்றியும் கச்சத்தீவு பற்றியும் மத்திய அரசு கவலை கொள்ளவில்லை,
ஜெயலலிதா ஆட்சியின் போது வருவாய்துறை சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அரசியல் ஆதாயம் காணுவதற்காக தேர்தலை முன்னிட்டு கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுக்கிறது. பா.ஜனதா கச்சத்தீவை வழங்கியதை மறுபரிசீலனை செய்வோம் என மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி, பாலியல் வன்முறை அரங்கேறி வருகிறது. மேலும் போதைபொருள் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. வாக்கு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வாக்காளர்கள் தி.மு.க. அரசுக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும். தி.மு.க. பதவியேற்ற மூன்று மாதங்களில் என்ன செய்தார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். மன்னராட்சி, அரச பரம்பரை போல ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் தி.மு.க.வில் பதவிக்கு வருகிறார்கள்.
ஊழல், கடன்வாங்குவது, போதைபொருள் விற்பனையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. போதைபொருள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது. நம்பிள்ளைகளை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். தி.மு.க. அரசால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவரே அதை குடித்து இறந்தார். அவருக்கு ரூ.10 லட்சம் தருகின்றனர்.
தி.மு.க. அளித்த 520 தேர்தல் அறிக்கைகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. சிமெண்ட், ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமானபொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் அரசும் தி.மு.க.வும் தான். நீட் தேர்வை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி செய்தது அ.தி.மு.க.,தான். நீட் தேர்வை கொண்டு வந்த தி.மு.க. தற்போது நீட் தேர்வுக்கு எதிராக போராடி நாடகமாடுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை தமிழகத்தில் குறைப்பதற்கு தி.மு.க அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்ன நன்மையை செய்துள்ளது. நாட்டிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து விட்டது, வீடு கட்டுவோர் கனவில் தான் கட்ட முடியும். அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி அ.தி.மு.க மிகவும் வலிமையான கட்சி அ.தி.மு.க. இனியும் மக்கள் சிந்திக்கவில்லை என்றால் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது. இவ்வாறு பழனிசாமி பேசினார்.