• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாட்டில் 9ஆயிரம் கோடி முதலீடு செய்த டாடா நிறுவனம்

Byவிஷா

Mar 14, 2024

தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 9ஆயிரம் கோடி முதலீடு செய்ததற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (13.3.2024) முகாம் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற முதல்வரின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
மேலும், அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக்கூடிய உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களையும், பெருமளவிலான வேலைவாய்ப்புகளை வருகிறது. அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொன்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
வாகன உற்பத்தித் திட்டத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம். 5 ஆண்டுகளில், 9000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் இத்தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாகனத் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. வே. விஷ்ணு. இ.ஆ.ப., மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் பாலாஜி ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண் ராய், இ.ஆ.ப., சிப்காட் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப. மற்றும் டாடா குழுமத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.