• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வடகாட்டுப்பட்டிக்கு வந்தடைந்த புகழ்பெற்ற மாசி பெட்டி

ByP.Thangapandi

Mar 9, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது உலக புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில்., இந்த கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஒச்சாண்டம்மன் ஆடை ஆபரணங்கள் அடங்கிய புகழ்பெற்ற மாசி பெட்டி எடுக்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும் ஆதி வழக்கப்படி துவங்கிய இந்த மாசி பெட்டி எடுக்கும் விழாவில் முதல் நாள் உசிலம்பட்டி சின்னக்கருப்ப சாமி கோவிலிருந்து ஒச்சாண்டம்மனின் ஆடை, ஆபரணங்கள் அடங்கிய 5 மாசி பெட்டிகளை பூசாரிகள், கோடாங்கிகள் அருள் இறங்கி ஆடி பக்தர்கள் ஆரவாரத்துடன் பாப்பாபட்டியில் உள்ள கோவிலுக்கு எடுத்து சென்றனர்.

புகழ்பெற்ற மாசி பெட்டி உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வடகாட்டுப்பட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, இளந்தோப்பு வழியாக 11 கிலோ மீட்டர் நடைபயணமாக பாப்பாபட்டிக்கு இரவு எடுத்து செல்லப்பட்டது, வழிநெடுகிழும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று மாசி பெட்டியை வழிபட்டு தரிசனம் செய்தனர்.

இந்த பெட்டியில் உள்ள உபகரணங்களை இரவு ஒச்சாண்டம்மனுக்கு அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இன்று நண்பகல் 12 மணிக்கு மீண்டும் இந்த பெட்டிகள் உசிலம்பட்டி நோக்கி புறப்பட்டன., மாலை 5:30 மணியளவில் வடகாட்டுப்பட்டிக்கு வந்த பெட்டிகள்., பூசாரி வீட்டில் தங்கிவிட்டு நாளை நண்பகல் 2 மணிக்கு மேல் உசிலம்பட்டி நோக்கி புறப்படும்.

வடகாட்டுப்பட்டி பூசாரி வீட்டிற்கு வந்த மாசி பெட்டிகளுக்கு ஆதி வழக்கப்படி பயறு கஞ்சி காய்ச்சி பெட்டிகளை சுமந்து வந்தவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.

மீண்டும் நாளை உசிலம்பட்டியில் உள்ள சின்னகருப்புக் கோவிலுக்கு பெட்டிகள் வரும் போது உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் காவல்துறைக்கு மரியாதை செய்யும் நிகழ்வு, பூசாரிகள் ஆனி செருப்பு அணிந்து ( பாதாள கட்டையில் ) நடந்து வரும் நிகழ்வை காண லட்சக்கணக்கான மக்கள் உசிலம்பட்டியில் கூடி நின்று மாசி பெட்டி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.