பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களின் மீது ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் வைத்திருக்கும் மனுக்களுக்கு அடுத்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் – மாவட்ட கலெக்டர் க.கற்பகம் உத்தரவு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (19.02.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், எந்த ஒரு வேலையும் செய்ய இயலாத நிலையில் வாழ்வாதாரத்திற்கே பொருளீட்ட இயலாத நிலையில் உள்ள 8 நபர்களுக்கு தற்காலிக இயலாதோர் உதவித்தொகைக்கான ஆணையினையும், 02 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
மேலும், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 279 மனுக்கள் பெறப்பட்டது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு அரசு அலுவலர்கள் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் தங்களின் கோரிக்கைகள் முறையாக பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்புடனும், அரசு அலுவலர்களின் மீது உள்ள நம்பிக்கையுடனும் உங்களிடம் வந்து கோரிக்கை மனுக்களை கொடுக்கக்கூடிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். சில அலுவலர்கள் ஒரு மாதத்திற்கு மேலாகியும் தங்களுக்கு வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியதாகும். கண்டிக்கத்தக்கதாகும்.
எனவே அடுத்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும்போது ஒரு மாதத்திற்கு மேல் நடவடிக்கை இல்லாமல் இருக்கும் மனுக்களின் மீது உரிய கவனம் செலுத்தி அவற்றிற்கு தீர்வு காண வேண்டும் . உரிய நடவடிக்கை எடுக்காமல் ஒரு மாதத்திற்கு மேல் கோரிக்கை மனுக்களை வைத்திருக்கும் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாண்புமிகு முதலமைச்சரின் தனி பிரிவிலிருந்து வரும் கோரிக்கைகளுக்கு மூன்று நாட்களுக்குள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் . இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வீரமலை, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மு.கார்த்திக்கேயன், உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
