• Sat. Jan 31st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

செந்தில்பாலாஜியின் ராஜினாமா கடிதத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

Byவிஷா

Feb 13, 2024

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்த நிலையில், நேற்று அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். இக்கடிதத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை பல்வேறு சோதனைகளுக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இதன்பின், 5 நாட்கள் காவலில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆஜர்படுத்தியது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 19-வது முறையாக வரும் 15-ம் தேதி வரை அண்மையில் நீட்டிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் கடந்த ஆக.12-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் சென்னை முதன்மை நீதிமன்றம், உயர்நீதிமன்றமும் நிராகரித்தது. இதனிடையே, அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு பின்னர் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து நீடித்து வந்தார். அவர் வகித்து வந்த பொறுப்பு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது.
இந்த சூழலில், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்த செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். முன்பு ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, அமைச்சர் பதவி குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியிருந்தார். கடைநிலை ஊழியர் ஒருவர் குற்ற வழக்கில் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார். ஆனால், செந்தில் பாலாஜி கடந்த 243 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். எந்த அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிக்கிறார்? இதன்மூலம் சமூகத்துக்கு அரசு என்ன சொல்ல வருகிறது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வரும் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அந்த கடிதத்தை முதல்வருக்கு அனுப்பி வைத்தார்.
அதில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுகிறேன் என கூறியிருந்தார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. அதன்படி, முதலமைச்சர் முக ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.