• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்…

ByP.Thangapandi

Jan 13, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.இராமநாதபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த இராமர் கோவில் அமைந்துள்ளது. கல் தூண் ஆக மட்டுமே உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தினசரி பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து இராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் இந்த கோவிலின் அருகே உள்ள கால்வாயை மன்மதன் என்ற தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து, கால்வாயில் கற்களை கொண்டு அடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய சாக்கடை கழிவு நீரும், ஆக்கிரமிப்பு செய்துள்ளவரின் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீரும் கோவில் அருகே தேங்கி துர்நாற்றம் வீசி வருவதாக கூறப்படுகிறது.

தற்போது வழக்கம் போல மார்கழி மாத பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்காத சூழலில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் நிலைய போலிசார் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இந்த சாலை மறியலால் உசிலம்பட்டி திருமங்கலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.