• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை தொகுதியை குறி வைக்கும் டிடிவி தினகரன்..!

Byவிஷா

Jan 3, 2024

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் சிவகங்கை தொகுதியில் போட்டியிடப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவை கைப்பற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய டிடிவி தினகரன், இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து செயல்பட முடிவு எடுத்திருக்கும் அவர், பாஜக தலைமையிலான கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் தனது சொந்த மண்ணான தஞ்சாவூரிலோ அல்லது ஏற்கனவே நின்று வெற்றி பெற்ற தேனி தொகுதியிலோ போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், தஞ்சை தொகுதியில் திமுக தொடர்ந்து செல்வாக்கோடு இருந்து வருகிறது. அதே நேரத்தில் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட தொடங்கிய டிடிவி தினகரன், தேனி தொகுதியை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான், டிடிவி தினகரன் சிவகங்கை தொகுதியை குறி வைத்திருக்கிறார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து, பாஜக சார்பில் ஹெச்.ராஜா போட்டியிட்ட நிலையில் இவர்கள் இருவரையும் எதிர்த்து அமமுக சார்பில் தேர்போகி வி பாண்டி என்பவரை டிடிவி தினகரன் வேட்பாளராக நிறுத்தினார்.
யாருமே எதிர்பாராத விதமாக கார்த்தி சிதம்பரம், ஹெச்.ராஜாவிற்கு அடுத்து 11.33 வாக்கு சதவிதத்துடன் அதாவது ஒரு லட்சத்து 22 ஆயிரம் வாக்குகளை பெற்று அந்த தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடித்தார் தேர்போகி பாண்டி. அதனை அடிப்படையாக வைத்தும் செட்டியார் சமூகத்திற்கு அடுத்து அந்த தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் இருப்பதாலும் இந்த முறை டிடிவி தினகரனே நேரடியாக சிவகங்கை தொகுதியில் போட்டியிட முடிவு எடுத்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி வைக்கும் நிலையில், அந்த தொகுதியில் உள்ள தேவேந்திரர், முத்தரையர் உள்ளிட்ட சமூக வாக்குகளும் தனக்கு கிடைக்கும் என அவர் நம்புகிறார்.
திமுக நேரடியாக சிவகங்கை தொகுதியில் போட்டியிடாமல், இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதியை ஒதுக்கும் சூழலில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து சிவகங்கை தொகுதியில் வென்றுவிடலாம் என்ற கணக்கை டிடிவி தினகரன் போட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.