• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சீனாவின் அச்சுறுத்தல் – தைவான் அதிபர்

Byமதி

Oct 29, 2021

சீனாவிடம் இருந்து நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என்று தைவான் அதிபர் சாய் இங்க் வென் கூறினார்.

சீனாவுடன் கடந்த 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்கு பின்னர், தைவான் தனி நாடானது. தற்போது அங்கு ஜனநாயக அரசுதான் அங்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இந்தநிலையில் தைவானை சீனாவுடன் மீண்டும் இணைப்போம் என்று சீன அதிபர் ஜின்பிங் கடந்த 8-ந் தேதி கொக்கரித்தார். இது உலக அரங்கில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

சீனாவுக்கும், தைவானுக்கும் இடையேயான உறவு, கடந்த பல்லாண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமாகி இருக்கிறது. சீனக் கடற்கரையில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில்தான் தைவான் உள்ளது. இந்த தைவானுக்கு எதிராக படை பலத்தை பயன்படுத்தவும் சீனா தயங்காது என்ற கருத்து நிலவுகிறது. இதை தைவானுக்கான சீன அலுவலக செய்தி தொடர்பாளர் உறுதிபடுத்தினார்.

அக்டோபர் மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டுமே சீனா 150 போர் விமானங்களை, அதுவும் அணுகுண்டு போடுகிற ஆற்றல் வாய்ந்த விமானங்களை, நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்களை தைவான் பகுதியில் பறக்க விட்டது. இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தைவான் அதிபர் சாய் இங்க் வென், அமெரிக்காவின் சி.என்.என். டெலிவிஷனுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், தைவானில், 2 கோடியே 30 லட்சம் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், தங்களுக்குத் தகுதியான சுதந்திரத்தை உறுதி செய்யவும் ஒவ்வொரு நாளும் கடினமாக முயற்சித்து வருகிறோம்.

சீனாவிடம் இருந்து வருகிற அச்சுறுத்தல், ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
அமெரிக்க படை வீரர்கள் தைவானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா எங்களுக்கு அந்த வகையில் பரந்த அளவிலான ஒத்துழைப்பை அளித்து வருகிறது. அதன் நோக்கம், எங்கள் ராணுவ திறனை அதிகரிப்பதுதான்.

தைவான் ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாகும். உலக அளவில் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு, ஜனநாயக மதிப்பீடுகள் நிலை நிறுத்தப்படுவதற்கு தைவான் பாதுகாக்கப்பட வேண்டும், என அவர் கூறினார்.

தைவானில் அமெரிக்க படை வீரர்கள் பயிற்சியில் இருக்கிறார்கள் என்பதை முதன்முதலாக ஒப்புக்கொண்டுள்ள தைவான் அதிபர் இவர்தான். அதே நேரத்தில் எவ்வளவு படை வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை இவர் வெளிப்படையாக கூறவில்லை.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “தைவானில் எத்தனை அமெரிக்க வீரர்கள் இருக்கிறார்கள் என்றால், அது மக்கள் நினைக்கிறபடி இல்லை” என மட்டுமே தெரிவித்தார்.