• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

எண்ணெய் கழிவு விவகாரம் : ஒடிசா சிறப்புக்குழு சென்னை வருகை..!

Byவிஷா

Dec 15, 2023

கடலில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகளுக்கு வழிகாட்ட, ஒடிசாவில் இருந்து சிறப்புக்குழு சென்னை வருகை தந்துள்ளனர்.
மிக்ஜாம் புயல் சென்னையை உலுக்கிய நிலையில், சில இடங்களில் இன்னும் மழைநீர் வடியாமல் இருக்கிறது. வெள்ளபாதிப்பால் சென்னையை சேர்ந்த பெரும்பாலான மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இந்த நிலையில், எண்ணெய் கழிவு கடலில் கலந்ததால் எண்ணூர் பகுதி மக்கள், குறிப்பாக மீனவர்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, உரிய ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு குழுவை அமைத்தது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் ஆர்.கண்ணன் தலைமையில் இந்த ஆய்வு குழு உருவாக்கப்பட்ட நிலையில், எண்ணெய் கழிவு தேங்கிய பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் முகத்துவாரம், எண்ணூர் கழிமுகம் உள்ளிட்ட இடங்களில் கழிவு பற்றி ஆய்வு செய்து அதனை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் சமர்ப்பித்தனர்.
இந்த நிலையில், சென்னை எண்ணூரில் மத்திய அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்தே இந்த எண்ணெய் கழிவு பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக எண்ணூர் கழிமுகம் பகுதியில் கலந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, எண்ணூரில் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெயை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியிருந்தது. இதற்கிடையில், எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகளுக்கு வழிகாட்ட ஒடிசாவில் இருந்து சிறப்புக்குழு இன்று சென்னை வருகிறது. சென்னை எண்ணூரில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு – பாதிப்பு மற்றும் எண்ணெய் அளவு குறித்து ஐ.ஐ.டி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதுவரை 40 மெட்ரிக் டன் எண்ணெய் மற்றும் 36,800 லிட்டர் எண்ணெய் கலந்த தண்ணீர் அகற்றபட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.