• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Oct 28, 2023

சிந்தனைத்துளிகள்

முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன். கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர். அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.
சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, "ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே,'' எனக் கூறினான்.
"போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,'' எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது.    அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.

பூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.

அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, "ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே...'' என எண்ணி மனம் புழுங்கினான்.

அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது.

அதைக் கண்டு திகைத்தான் அமுதன். "இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?'' என எண்ணி ஆச்சரியப்பட்டான்.

அப்போது, "அமுதா... நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன்.

"அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்...'' என்று சொல்லி மறைந்தது.

அதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநூறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.