• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம்..!

Byவிஷா

Oct 5, 2023

அக்டோபர் 23 மற்றும் 24 சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. ஆர்டர்கள் குவிவதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமான ஒன்று தசரா எனப்படும் நவராத்திரி பண்டிகை. இந்த மாதம் வருகிற 23 மற்றும் 24ம் தேதிகளில் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பலர் தங்களது வீடுகளில் கொலு பொம்மையை வைத்து வழிபாடு செய்வது வழக்கமாகும். தங்களின் வசதிகேற்ப படிகளை வடிவமைத்து அதில் பல வகையான உயிரினங்கள் மற்றும் சாமி சிலைகள் மற்றும் முனிவர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சிலைகளை வைத்து வழிபடுவர். 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் அம்மன் மூன்று வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சி தருவதாக நம்பப்படுகிறது. திருவிழாவின் பத்தாவது நாள் விஜயதசமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி பண்டிகை புரட்டாசி மாதத்திற்கு பின்னர் வரும் பிரதமை திதியில் தொடங்குகிறது.

இந்நிலையில் நவராத்திரி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான சிலைகள் தயாரிக்கும் பணியில் விழுப்புரம் மாவட்டம் கரடிபாக்கம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.ஒரு அடி முதல் 3 அடி வரையில் சுமார் 35 வகையான சிலைகள் தயார் செய்யப்படுகின்றன.
இயற்கையை பாதிக்காத வண்ணம் மரக்கூழ், மரவள்ளி கிழங்கு கூழ், வண்டல் மண் ஆகியவற்றை கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.இந்த முறை கடந்த ஆண்டுகளை காட்டிலும் ஆந்திரா,கேரளாவில் இருந்து அதிகளவில் ஆர்டர்கள் குவிந்துள்ளன.
மூலப்பொருட்களின் விலையும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளதால் கொலு பொம்மைகளின் விலையும் 300 முதல் 2500 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்திற்கு பின்னர் தற்போது தான் வியாபாரம் சூடுபிடித்துள்ளதாக தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.