• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நற்றிணைப் பாடல் 249:

Byவிஷா

Sep 13, 2023

இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்,
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர,
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்
வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ,
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்,
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி,
அம்பல் மூதூர் அலர் எழ,
சென்றது அன்றோ, கொண்கன் தேரே?

பாடியவர்: உலோச்சனார்
திணை: நெய்தல்

பொருள்:
இரும்பு போல் கருநிறக் கிளைகளை உடையது புன்னை மரம். நீலமணி போன்ற அதன் பசுமையான இலைகளுக்கு இடையே, வெள்ளி போல் விளங்கும் பூக்களைப் பூத்திருக்கும். பொன் போன்ற அதன் மகரந்தப் பொடிகள் உதிரும்படி உடலின் புறத்தே கோடுகளைக் கொண்டு மேனியில் பூ மணம் கமழும் வண்டுகள் அந்தப் பூக்களில் உள்ள தேனை உண்ண ஊதும்போது, அதன் ஒலியைப் புலியின் ஒலியோ என்று எண்ணிக்கொண்டு, பந்து தாவுவது போலத் தாவி ஓடும் குதிரை பூட்டிய தேரில் கொண்கன் தேர் வந்தது. வளம் மிக்க தெருவில் ‘கல்’ என்னும் ஒலியுடன் வந்தது. முன்பே என் காதல் பற்றி அம்பல் பேசி முணுமுணுத்துக்கொண்டிருக்கும் தெரு மக்கள் வாய்விட்டு பேசி அலர் தூற்றும்படி வந்தது. இப்படித் தலைவி தோழியிடம் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது கருத்து.