நற்றிணைப் பாடல் 248:
”சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்
கார் வரு பருவம்” என்றனர் மன் இனி,
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்,
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக் கணம் போல,
நினை மருள்வேனோ? வாழியர், மழையே!
பாடியவர்: காசீபன்கீரனார்
திணை: முல்லை
பொருள்:
தோழி தலைவியைத் தேற்றுகிறாள். “சிறிய மலர்களுடன் தேன் மணக்கும்
பசுமையான முல்லைக்கொடி புள்ளிகளை உடைய நல்ல மான் போல, பலரும் விரும்பும் முகத்தைக் காட்டிக்கொண்டு புதர்களில் அழகு பெற மலரும்படி கார் காலம் வரும்போது திரும்பிவிடுவேன்” என்று அவர் சொன்னார். அவர் இன்னும் வரவில்லை. முழங்கும் இடியே! இவள் வருந்தி நடுங்குவதைக் காணவேண்டும் என்று இவள் மாட்டு அன்பு இல்லாததால் முழங்குகிறாய். உன் முழக்கத்தை உண்மை என்று நம்பி, மயில் கூட்டம் மடத்தனமாக ஆடுவது போல, மழையே!
நானும் அவர் வராதபோது, மடத்தனமாக உன்னைக் கண்டு ஏமாந்து நடுங்குவேனோ என்று தோழி கூறுகிறாள்.
உண்மையான கார்ப்பருவம் ஆயின் பொருள் ஈட்டிவர இவளை விட்டுப் பிரிந்து சென்ற அவர் வந்திருப்பார் என்பது குறிப்பு.
இப்படித் தோழி சொல்வதைக் கேட்டு தலைவியும் நம்ப வேண்டும் என்பது தோழியின் நோக்கம்.