• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Jul 16, 2023

நற்றிணைப் பாடல் 207:

கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென,
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே;
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி

வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல்,
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,
கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்,
வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால்

திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே

திணை: நெய்தல்

பொருள்:

அன்னாய்! கழி சூழ்ந்த கண்டல் மரங்களாலாகிய வேலியையுடைய கொல்லையிடை யமைந்த; முள்ளிச் செடிகளால் வேய்ந்த குறுகிய கூரையையுடைய சிறுகுடில்களையுடைய; கொழுவிய மீன் கொள்பவர் உறைகின்ற பாக்கமெங்கும் கல்லென்னும் ஓசை யுண்டாக; நெடிய தேரினைச் சமைத்துக் கொண்டு நம்காதலர் வருவது நிறுத்தப்படுவதொன்றன்று; மலைபோன்ற குவிந்த மணற் பரப்பைக் கடந்துவந்த அவர் தாம் வறிதே இனிப் பெயர்வரோ? பெயரார் காண்!; இரவில் இளைஞரும் முதியோரும் தம் உறவினருடன் கூடியிருந்து கொல்லவல்ல சுறாமீன் கிழித்ததனாலே சுருங்கிய நாம்புகளைக் கொண்டு வலையை முடிகின்ற; முதிர்ச்சியையுடைய பரதவரின் மடப்பமிக்க மொழியையுடைய இளமகளான இவள் அவருக்கே யுரியள்; அங்ஙனம் அன்றி வேற்றுவரைவிற் படுத்தினிரேல் வலையையும் தூண்டினையும் பிடித்துப் பெரிய காற்று வீசுதலானே அலையெழுகின்ற கடலின் கண்ணே செல்லுகின்ற; கொலைத் தொழிலையுடைய வெய்ய பரதவர் சிறார்வாய்ப்பட்டொழிந்தனளேயாம்; இனிக் கூறியாவதென்?