

‘துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி,
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று,
துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ,
செவ் வாய்ப் பாசினம் கவரும்’ என்று, அவ் வாய்த்
தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க’ என
எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும்,
‘நல் நாள் வேங்கையும் மலர்கமா, இனி’ என
என் முகம் நோக்கினள்; எவன்கொல்?- தோழி!-
செல்வாள் என்றுகொல்? ‘செறிப்பல்’ என்றுகொல்?
கல் கெழு நாடன் கேண்மை
அறிந்தனள்கொல்? அஃது அறிகலென் யானே!
பாடியவர்: ஐயூர் முடவனார்
திணை: குறிஞ்சி
பொருள்:
தோழீ! பஞ்சு நுனிபோன்ற தலையையுடைய அப்பொழுது ஈன்ற தினைக் கதிர்கள் எல்லாம்; பால் நிறைந்து முற்றித் தலைசாய்த்து மேலேயுள்ள தோடுகள் அலைதல் கொண்டன. அவற்றை நோக்கி இனி உண்ணத்தகுமென்று கருதி; அக்கதிர்களைக் கொய்து போக வேண்டி; துறுகல்மீது சிவந்த வாயையுடைய பசிய கிளியின் கூட்டம் கூடி; இனிக் கவர்ந்து கொண்டே போய்விடுமாகலின் நீ ஆங்கே சென்று கிளியோப்புந் தட்டையைப் புடையிலுள்ள குற்றியிலேயே புடைத்து ஒலியெழுப்பினையாகிக் கவண் கல்லும் வீசுக என; எந்தை வந்து கூறினான்; அப்பொழுது எம் அன்னையும் இனி நல்ல நாளை அறிவுறுத்தும் வேங்கையும் மலர்க என்று கூறி என் முகத்தைக் குறிப்பாக நோக்கினள் கண்டாய்; என்னைத்தான் இவள் தினைப்புனம் காக்கச்செல்வாளென்றோ? அல்லது தன்னுள்ளத்தே தான் நின்னை (தலைவியை) இல்வயிற் செறிப்பலென எண்ணியோ? வேறு ஏதேனுங் கருதிய துண்டோ!; மலை பொருந்திய நாடன்பால் வைத்த நம்முடைய கேண்மையை அவ்வன்னைதான் அறிந்துகொண்டனளோ? யான் அஃது அறிகலேன் அவளது எண்ணம் இன்னதென்று நான் அறிந்திலேன்; நீ அறிந்தனையாயிற் கூறிக்காண்!
