

நற்றிணைப் பாடல் 208:
விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி,
அறல் போல் தௌ; மணி இடை முலை நனைப்ப,
விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து,
எவன் இனைபு வாடுதி?-சுடர் நுதற் குறுமகள்!-
செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும்,
நோன்மார் அல்லர், நோயே; மற்று அவர்
கொன்னும் நம்புங் குரையர் தாமே;
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்;
பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள்
முடியாது ஆயினும் வருவர்; அதன்தலை,
இன் துணைப் பிரிந்தோர் நாடித்
தருவது போலும், இப் பெரு மழைக் குரலே?
பாடியவர்: நொச்சி நியமங் கிழார்
திணை: பாலை
பொருள்:
பெருமை மிக்க உன் அணிகலன்கள் நழுவும்படி, ஆற்றுமணல் போன்ற மழைத்துளிகள் உடலை நனைக்கும்படி இடைவிடாமல் அழுதுகொண்டு விம்முகிறாய்; வாடுகிறாய். சுடரும் நெற்றி கொண்ட குறுமகளே! அவர் உன்னை விட்டுவிட்டு செல்லமாட்டார்; சென்றாலும் உன் பிரிவு நோயை அவர் தாங்கமாட்டார்.
மேலும் அவர் எல்லா வகையிலும் நம்பிக்கைக்கு உரியவர். உன்மேல் சிறந்த அன்பு கொண்டவர். அவர் தோற்றத்தைப் பார்த்தாலே தெரிகிறது. பிரிதிருக்கும் உன்னைக் காட்டிலும் உன்மேல் இரக்கம் கொண்டு, பொருள் ஈட்டும் பணி முடியாவிட்டாலும், திரும்பிவிடுவார். மேலும் துணையைப் பிரிந்திருப்போருக்கு உதவுவதற்காகப் பெருமழை பொழியப்போகும் இடிமுழக்கம் கேட்கிறது, பார்.
