• Tue. Apr 30th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 20, 2023

சிந்தனைத்துளிகள்

சிந்தனை கதை…!!!

இறைவன் நம்மை சோதிப்பது நமது உண்மையான குணத்தை நாம் அறியவே..!!
குருகுலத்தில் பாடம் நடந்து கொண்டிருந்தது. “யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்றார் குரு.
ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே…அனைத்து அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? கஷ்டங்களை சந்திக்காமல் அவன் அருளை பெறவே முடியாதா?” என்று கேட்டான்.
“நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்.” என்று கூறினார் குரு.
மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள்.
மாணவர்களுக்கு முன்னால் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருந்தன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.
“இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?” மாணவர்களை கேட்டார் குரு.
“இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவைதான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான். இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?”மாணவர்களை கேட்டார்.
“தெரியவில்லை.”
“ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.” என்றபடியே மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை கீழேதள்ளி கவிழ்த்தார்.அதிலிருந்து தேன் வெளியேவந்தது.
மற்றொரு ஜாடியை கவிழ்த்தார்.அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.

“ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்கு தெரியாது. 

இரண்டும் ஒன்றே என்று நினைத்துக் கொண்டீர்கள். வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில்தான் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் அதை கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதை காட்டிவிட்டது.”
“இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளை சந்திக்கும்வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் சோதனையை சந்திக்கும்போதுதான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது.””நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது.நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்” என்றார்.”கெட்டவர்களுக்கும், சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான்.
ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவிசாய்ப்பதில்லை.
இறைவன் நம்மை சோதிப்பதும் நமது: உண்மையான குணத்தை நாம் அறியவே. அவனறிய அல்ல. அவனுக்கு தான் உள்ளே இருப்பது சந்தனமா சாக்கடையா என்று தெரியுமே.அவன் அப்படி செய்வது நம்மை நாமே தெரிந்துகொள்ள. நம்மை நாம் அறிந்து கொண்டால்தான் நம்மை திருத்திக்கொள்ளமுடியும்.இல்லையெனில் நமது தவறுகளை திருத்திக் கொள்ள நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *