• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Jan 11, 2023

நற்றிணைப் பாடல் 98:
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில், தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென,
மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே-
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே!

பாடியவர்: உக்கிரப் பெருவழுதி
திணை: குறிஞ்சி

பொருள்:
முள்ளம் பன்றிக்கு அதன் உடலில் உள்ள முடிகள்தான் அதன் முள். அந்த முடியானத சப்பாத்தி முள் போல் கெட்டியானது. சிறிய கண்ணை உடைய முள்ளம் பன்றி வயல்வெளிக்கு மேயச் சென்றது. மலைவயல் புனத்தில் அதனை வீழ்த்தப் பொறி வைத்திருந்தனர். அந்தப் பொறியின் வாயிலில் அந்தப் பன்றி நுழைய முயன்றபோது பல்லி ‘பட் பட்’ என்று ஒலித்தது. அதன் பொருளை உணர்ந்துகொண்ட பன்றி மெல்ல மெல்லப் பின்வாங்கித் தன் கல்லுக் குகைக்குத் திரும்பித் தப்பிப் பிழைத்து வாழலாயிற்று. இப்படிப்பட்ட மலைநாட்டுக்கு அவன் தலைவன். என் தந்தை என் வீட்டு நகருக்குக் கட்டுக்காவல் போட்டுள்ளார். காவலர் என் வீட்டைக் கண்ணுறக்கம் இல்லாமல் காவல் புரிகின்றனர். அவர்கள் சோர்ந்திருக்கும் பதம் பார்த்து அவர் இரவில் வருகிறார். இது கொடிய செயல். அதை விடக் கொடிய செயல் ஒன்று உண்டு. எந்த நாளும் என் கண்கள் உறங்குவதில்லை. அத்துடன் என் நெஞ்சும் என்னுடன் வராமல், என்னிடம் அன்பு கொள்ளாமல் அவரிடமே சென்றுவிடுகிறது. இது அவர் கட்டுக்காவலை மீறி வருவதைக் காட்டிலும் கொடியது.