• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்க விஜயகாந்த் கோரிக்கை

பொங்கல் பரிசாக கடந்த ஆட்சியில் வழங்கிய ரூபாய் 2500 வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 2021-ல் அதிமுக ஆட்சியின் போது அரிசி, வெல்லம், கரும்பு என 21 பொருட்களுடன் ரூ.2,500 பரிசு வழங்கப்பட்டது. ஆனால் 2022-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன. பொங்கல் பரிசில் ரொக்கப் பணம் இல்லை. பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்து விமர்சனங்களும் அப்போது எழுந்தன. இந்த நிலையில் 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் பரிசில் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறவில்லை. அறிவிக்கப்பட்ட ரொக்கப் பணமும் குறைவாக உள்ளது. ஏற்கனவே சொத்து வரி, மின் கட்டணம், விலைவாசி உயர்வால் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வரும் நிலையில் பொங்கல் பரிசாக ரூ.1000 மட்டும் வழங்கப்படும் என அறிவித்திருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் 21 பொருட்களுடன் ரூ.2,500 ரொக்கமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் பொருட்கள் குறைக்கப்பட்டதுடன், ரொக்கமும் குறைவாக அறிவித்திருப்பது ஏழை, எளிய மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு மறு பரிசீலனை செய்து, தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மனநிறைவோடு சிறப்பாக கொண்டாடும் வகையில் கடந்த ஆட்சியில் வழங்கிய குறைந்தபட்சம் ரூ.2,500 உயர்த்தி வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.