• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Nov 29, 2022

நற்றிணைப் பாடல் 65:

அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக்
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ,
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து,
புலியொடு பொருத புண் கூர் யானை
நற் கோடு நயந்த அன்பு இல் கானவர்
விற் சுழிப்பட்ட நாமப் பூசல்
உருமிடைக் கடி இடி கரையும்
பெரு மலை நாடனை ”வரூஉம்” என்றோளே.

பாடியவர்: கபிலர்
திணை: குறிஞ்சி

பொருள்:
மலைநாடன் வரூஉம் – என்று பக்கத்து வீட்டுக்காரி கூறினாள். இந்தச் சொல்லைத் தோழி கேட்டாள். அதனை விரிச்சி (நல்ல சகுனம்) என எடுத்துக்கொண்டு ஓடிவந்து தலைவியிடம் சொல்கிறாள்.

விரிச்சி சொன்ன பக்கத்து வீட்டுக்காரி வாய் அமுதம் உண்ணட்டும் – என்கிறாள். நல்லது சொன்னவர் வாயில் சர்க்கரை போடு என்று இக்காலத்தில் சொல்கிறோமே அது போன்றது இது. கிடங்கில் போல் கரையை உண்டாக்கிக்கொண்டு காட்டாறு ஓடிவருகிறது. அதில் பாசி படிந்து கலங்கிய நீர், அலை போட்டுக்கொண்டு ஓடிவருகிறது. பின் அருவியாகக் கொட்டுகிறது. அந்த வெள்ளைநிற அருவி கொட்டும் நீர்த்துறையில் ஆண்யானை ஒன்று நீராடியது. புலி ஒன்று அந்த யானையைத் தாக்கியது. யானை அந்தப் புலியைக் குத்தித் துரத்திவிட்டது. என்றாலும் புலி தாக்கிய புண் அதன்மீது இருந்தது. அந்த யானையை மலைவாழ் மக்களாகிய கானவர் நாற்புறமும் அம்பு எய்து தாக்கினர். அந்த வில்லின் சுழியிலிருந்து அதனால் மீள முடியவில்லை. கானவர் அதன் தந்தங்களை வெட்டி எடுத்தனர். யானை வலி தாங்க முடியாமல் இடிபோல் முழங்கி ஓலமிட்டது. – இப்படிப்பட்ட மலை அது. அந்த மலைநாட்டின் தலைவன் அவன். அந்த நாடன் திரும்பி வருகிறான் – என்று சொன்னது விரிச்சி.