• Sat. Apr 20th, 2024

இலக்கியம்

Byவிஷா

Nov 30, 2022

நற்றிணைப் பாடல் 66:
மிளகு பெய்தனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன்
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி,
புன் புறா உயவும் வெந் துகள் இயவின்,
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்,
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல்லோ
கோதை மயங்கினும், குறுந் தொடி நெகிழினும்,
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்,
மாண் நலம் கையறக் கலுழும் என்
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே?

பாடியவர்: இனிசந்த நாகனார்
திணை: பாலை
பொருள்:
காதலனுடன் சென்றிருக்கும் என் மகளின் மலர் போன்ற கண், இப்போது, வழியில் காற்றடிக்கும் தூசி-மண் பட்டுக் கசங்கிக் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்குமோ – என்று தாய் தன் மகளை எண்ணிக் கலங்குகிறாள்.
மிளகை வாயில் போட்டு மெல்லும்போது காரம் இருப்பது போலச் சுவை இருக்கும் உகாய்க் காயைச் சிதைத்து உண்ட புறா தனித்து விரிந்திருக்கும் மரக்கிளை ஒன்றில் ஏறி இருந்துகொண்டு அதன் காரம் போக, வெறி கொண்ட துடிப்போடு தன் கழுத்துச் சிறகுகளைக் கோதிக்கொண்டிருக்கும் காடு அது. கோடையால் புழுதி பறக்கும் காடு அது. அந்தக் காட்டில் தான் விரும்பிய காதலனுடன் அவள் சென்றுகொண்டிருக்கிறாள். என்றாலும் அவள் கண், கலங்கி அழுமோ? காற்றுப் புழுதி பட்டுக் கலங்கி அழுமோ?

என்னுடன் இருக்கும்பபோது, அவள் அணிந்திருக்கும் மாலை வாடினாலும், கையிலிருக்கும் வளையல் நழுவினாலும், அல்குல் என்னும் இடுப்புப் பகுதியில் அணிந்திருக்கும் காசு என்னும் அணிகலன் இடம் மாறினாலும் தன் அழகொல்லாம் சிதையும்படிக் கலங்கி அழும் கண்கள் ஆயிற்றே அவை. அந்தக் கண்கள் இப்போது தூசி பட்டால் கண்ணீர் விடுமல்லவா – என்று தாய் கலங்குகிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *