மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட, இந்தோனேசியா நாட்டின் சுமத்திரா தீவுப் பகுதியைச் சேர்ந்த 8 அரிய வகை உயிரினங்களை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த அரிய வகை உயிரினங்களில் 3, மூச்சு திணறி உயிரிழந்து விட்டன. இதை அடுத்து உயிருடன் இருந்த 5 அரிய வகை உயிரினங்களும், மலேசிய நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டன.
இந்த உயிரினங்களை சட்ட விரோதமாக விமானத்தில் கடத்திக் கொண்டு வந்த, சென்னையைச் சேர்ந்த 2 கடத்தல் பயணிகளையும், சுங்க அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தது. அந்த விமானத்தில் அரிய வகை உயிரினங்கள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள், அரிய வகை உயிரினங்கள் கடத்தலை கண்டுபிடிப்பதற்கான, சுங்கத்துறை மோப்ப நாயுடன், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதியில், தயாராக இருந்தனர்.
அந்த விமானத்தில் இறங்கி வந்த பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர்.அப்போது சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள், பெரிய கூடைகளுடன் விமானத்திலிருந்து இறங்கி வந்தனர். சுங்க அதிகாரிகள் சந்தேகத்தில் அவர்கள் இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளை பரிசோதித்தனர். அந்தக் கூடைகளுக்குள் அரிய வகை உயிரினங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து அவர்கள் இருவரையும் வெளியில் விடாமல் நிறுத்தி வைத்து விட்டு, சென்னை பெசன்ட் நகரில் உள்ள வன உயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த 8 அபூர்வ உயிரினங்களில், ஆசிய மரநாய் 1, கிழக்குச் சாம்பல் கிப்பன் குரங்கு 2 , ஆகிய 3 உயிரினங்கள், உயிரிழந்து விட்டன. மற்ற 5 அபூர்வ உயிரினங்கள் உயிருடன் இருந்தன.
