• Sat. Mar 22nd, 2025

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் 61 பேர் பலி..!

Byவிஷா

Jan 21, 2024

அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவின் காரணமாக இதுவரை 61 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 15 நாட்களாக கடும் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பனிக்கட்டி மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக மத்திய மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விமான சேவைகளில் தாமதம் மற்றும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் விமான நிலையங்களில் சிக்கி தவித்து வருகின்றனர்.
குறிப்பாக கடந்த 2 நாட்களாக வடக்கு டகோட்டாவில் காலை வெப்பநிலை மைனஸ் 26 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் மைனஸ் 29 டிகிரியாக குறையும் என அஞ்சப்படுகிறது. கடும் பனிப்புயல் காரணமாக 2,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புயலில் தாக்கத்தால் பள்ளிகள் மற்றும் சாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை, பனி, காற்று மற்றும் கடுமையான குளிர் வெப்பநிலை ஆகியவை காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . பல பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை மையம் 26 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி வடக்குடகோட்டாவிலிருந்து புளோரிடா வரை மிகக் குளிர்ந்த காற்று வீசலாம். இன்னும் சில நாட்கள் பனியின் தாக்கம் தீவிரமடையும் என தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 150 மில்லியனுக்கு மேல் அதிகமாக வாழும் மக்கள் தொடர்ந்து இந்த பனிப்புயலால் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். சுமார் 2.50 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனை சரிசெய்ய மேலும் 2 வாரங்கள் ஆகலாம் எனத் தெரிவிக்பட்டுள்ளது.