எரிவாயு ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
மத்திய பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் முல்தான் மாவட்டம் ஹமித் புர் கனொரா பகுதியில் இன்று காலை எரிவாயு ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
லாரி வெடித்ததில் அருகில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன, மேலும் தீ மற்றும் வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததால் இறப்புகள் ஏற்பட்டதாக மீட்பு அதிகாரி முகமது பிலால் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததாகவும், லாரியில் ஏற்பட்ட எரிவாயு கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பு என்ன என்பதை துல்லியமாக கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.