• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆர்டிஓ அலுவலகம் போகாமலே 58 சேவைகளை பெறலாம்

ByA.Tamilselvan

Sep 18, 2022

ஆர்டிஓ அலுவலகம் போகலாமலேயே பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 58 வகையான சேவைகளை பெற முடியும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நமது நாட்டில் இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் என வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
இதனால், வாகனப் பதிவு, வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம், நாடு முழுவதும் வாகனத்தை கொண்டு செல்வதற்கான நேஷனல் பர்மிட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளின் தேவையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
எப்போதும் பிசியாக இருக்கும் அரசு அலுவலகங்களில் ஆர்டிஓ அலுவலகங்களும் ஒன்றாக உள்ளன. இந்த அலுவலகங்களில் சேவையைப் பெற மக்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழலும், சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.இவைகளுக்கு முடிவு கட்டும் நோக்கில், போக்குவரத்து தொடர்பான 58 சேவைகளை ஆன்லைனில் வழங்குவதற்கான நடவடிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் எடுத்துள்ளது.
இதற்காக, www.parivahan.gov.in என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், இதன்மூலம் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், புகைப்படம் மாற்றம், கையொப்பம் மாற்றம், நடத்துநர் உரிமம், வாகனப் பதிவு, சர்வதேச ஓட்டுநர் உரிமம் உட்பட 58 சேவைகளை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த சேவைகளுக்கான கட்டணங்களையும் ஆன்லைன் முறையில் செலுத்த முடியும்.ஆதார் எண் உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்தி இந்த சேவையை ஆன்லைனில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், ஆதார் எண் இல்லாதவர்கள் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை காரணமாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியத்தை தவிர்க்க முடியும் என்றும், இதன் காரணமாக பொதுமக்களின் நேரம் மிச்சப்படுவதோடு விதிமுறைகளின் சுமையும் குறையும் என்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.