தமிழகத்தில் மட்டும்தான் அனைத்து மத வழிபாட்டு தளங்களுக்கும் பொதுமக்கள் சுதந்திரமாக சென்று வர முடிகிறது நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேச்சு
இயேசுவின் சீடரான தோமா, கி.பி. 72-ம் ஆண்டு சென்னை பரங்கிமலையில் தற்போதுள்ள புனித தோமையார் மலையில் உயிர் நீத்தார் என்ற மரபு வழிச்செய்தி இருக்கிறது. இந்தியாவில் கிறிஸ்தவ மார்க்கத்தை முதன் முதலில் பரப்பிய இவர் கேரளாவில் தன்னுடைய மிஷனரி பணியை தொடங்கினார்.

சென்னை பரங்கிமலையில் 300 அடி உயரத்தில் உள்ள இந்த மலையின் மீது போர்த்துக்கீசிய மறைப்பணியாளர்கள் 1523-ம் ஆண்டில் சிறிய அளவில் கோவில் ஒன்றை கட்டினார்கள். பிறகு அது பெரிய தேவாலயமாக கட்டப்பட்டது. இந்த நிலையில் புனித தோமையார் மலை தேவாலயத்தை உலக புகழ் பெற்ற தேவாலயமாக போப் ஆண்டவரால் அறிவிக்கப்பட்டது.
இதற்காக தேவாலயத்தில் நடைபெற்ற விழாவில், புனரமைக்கப்பட்ட புனித தோமையார் மலை தேசிய திருத்தல பேராலயத்தை வாடிகன்
இந்திய தூதர் பேராயர் லியோ போல்டோ ஜெரேலி திறந்து வைத்தார். பின்னர் தேவாலயத்தை பசிலிக்காவிற்கான போப் ஆண்டவர் அறிவிப்பை வாடிகன் இந்திய தூதர் பேராயர் லியோ போல்டோ ஜெரேலி வெளியிட்டார். பின்னர் புதிதாக கட்டப்பட்ட மரியாளின் இணை ஆலயத்தை ஐதராபாத் பேராயர் அந்தோனி கர்தினால் பூலா திறந்து வைத்தார். புனித தோமையாரின் இணை ஆலயத்தை மும்பையின் முன்னாள் பேராயர் ஆஸ்வால்ட் கர்தினால் கிரேசியஸ் திறந்து வைத்தார். புணரமைக்கப்பட்ட அராதணை ஆலயத்தை சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் டாக்டர். ஜார்ஜ் அந்தோணிசாமி திறந்து வைத்தார். விசுவாச தோட்டத்தை புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் டாக்டர். பிரான்சிஸ் கலிஸ்ட் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் முதல் பசிலிக்கா என்ற பெருமை கொண்ட புனித தோமையார் மலை தேசிய திருத்தலம் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டதின் நினைவாக நன்றி திருப்பலி நடந்தது.

செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் முதல் பசிலிக்கா என்ற பெருமை கொண்ட புனித தோமையார் மலை தேசிய திருத்தலம், பசிலிக்காவாக உயர்த்தப்பட்டதின் நினைவாக விழா மலரை வாடிகன் இந்திய தூதர் பேராயர் லியோ போல்டோ ஜெரேலி வெளியிட தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் அப்பாவு பெற்று கொண்டார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு கிராமப்புற தொழில்கள், குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரிய அமைச்சர் அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் S.M.நாசர், தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன்,
நாடாளுமன்ற உறுப்பினர் P.வில்சன்,பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி,தமிழ்நாடு பாட புத்தகக் கழகம் திண்டுக்கல் தலைவர் லியோனி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மேடை பேச்சு சபாநாயகர் அப்பாவு பேசுகையில்:
என்ன ஒற்றுமை என்றால் இது திருத்தலமாக உயர்த்தப்பட்ட போது மறைந்த தலைவர் கலைஞர் அப்போது முதல்வராக இருந்தார். இது பேராலயமாக இன்று அறிவிக்கப்பட்ட போது ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இது இறைவனின் அற்புதம்.
எளிதாக நாம் இதை கடந்து சென்று விட முடியாது.2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவுடன் பணியாற்றி போக்குவரத்து வசதி இல்லாத காலகட்டத்தில் தோமையார் எவ்வாறு இங்கு வந்தார் என்பது இன்னும் தெரியாத ஒன்று. எவ்வளவு பெருமை பெற்ற மண்ணாக இந்த தமிழ்நாடு இருக்கிறது என்றால் தோமையார் பாதம் பட்ட மண் புண்ணிய பூமி ஆக இருப்பதால்தான் தமிழ்நாட்டையும், தமிழையும் யாரும் நெருங்கி பார்த்துவிட முடியாது. தமிழகத்தில் மதச்சார்பின்மையை யாரும் தொட்டுப் பார்க்க முடியாது.
பல மாநிலங்களில் இன்று என்ன நடக்கிறது என பார்ப்பீர்கள். வழிபாட்டு தளத்திற்கு செல்ல முடியாது சென்று வெளியே வர முடியாது. வழிபாட்டு ஆலயங்கள் நேற்று இருக்கும் இன்று இருக்காது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் சட்டத்தின் வழியில் ஆட்சியை நடத்துகிறார்.
தமிழகத்தில் மட்டும்தான் அனைத்து மத வழிபாட்டு தளங்களுக்கும் பொதுமக்கள் சுதந்திரமாக சென்று வர முடிகிறது. தமிழகத்தில் தேவாலயம் மற்றும் மசூதி கட்டுவதற்கான நடைமுறையை எளிமையாக்கியது திமுக அரசு என தெரிவித்தார்.