

மாற்றுத்திறனாளிகள் தினத்தை உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்த முன்வரவேண்டும் என்று வலியுறுத்தி திண்டுக்கல்லில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பாக மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ம் தேதியாகும். பாண்டிச்சேரி போன்ற சிறிய மாநிலங்களில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கான குறைந்த பட்ச ஊக்கத்தொகையாக ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.1000லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தது.
ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 6 மாதமாகியும் உதவித்தொகையை உயர்த்த முன்வரவில்லை. பெட்ரோல், டீசல் விலை, மருந்து, உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் காய்கறிகளின் விலையும் கூட உயர்கிற நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் அவர்களது உதவித்தொகையை உயர்த்தாத தமிழக அரசைக் கண்டித்து இந்த மறியல் போராட்டம் நடைபெறுவதாக உயரம் தடைபட்டோர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அப்பு தெரிவித்தார்.
திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு அவர் தலைமை வகித்தார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கத்தின் புறநகர்ச்சயலாளர் ஏ.ஸ்டாலின், புறநகர் துணைத்தலைவர் தெரஸ்ஜெனவா, நகரத்துணைத்தலைவர் ஜெயந்தி, நகர இணைச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் மறியலில் பங்கேற்று கைதானார்கள்.
இதே போல் செம்பட்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு ஆத்தூர் ஒன்றியச்செயலாளர் ஆறுமுகவள்ளி தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் செல்வநாயகம், ஆத்தூர் ஒன்றியச்செயலாளர் வனிதா, இணைச்செயலாளர் மலைச்சாமி, பொருளாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
