மெக்சிகோவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மேடை சரிந்து விழுந்து 5 பேர் பலி மற்றும் 50 பேர் படுகாயம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மெக்சிகோவின் நியூவோ லியோன் மாகாணத்தில், ஜனாதிபதி வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்வில் பிரச்சார மேடை திடீரென சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மெக்சிகோவில் வரும் ஜூன் 2ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நியூவோ லியோன் மாகாணத்தில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் நேற்று பலத்த காற்று வீசியது. அப்போது, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் பிரச்சார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தன.
மேடை திடீரென சரிந்து, பார்வையாளர்களின் மீது விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 50 பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் தனது குழு உறுப்பினர்களும் படுகாயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்துக்கு சென்று கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
நியூவோ லியோன் மாகாண ஆளுநர் சாமுவேல் கார்சியா விபத்து குறித்து பொதுமக்களிடம் உரையாற்றினார். அதில், அப்பகுதியில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் குடியிருப்புவாசிகள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், சான் பெட்ரோ கார்சா கார்சியாவில் மேடை சரிந்த விபத்தை அளுநர் சாமுவேல் கார்சியாவும் உறுதிப்படுத்தினார்.