• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

4வது அலையில் தப்பிக்குமா அமெரிக்கா?…

ByIlaMurugesan

Aug 10, 2021

அமெரிக்காவில் உருமாறிய கொரோனா டெல்டா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.


கொரோனா பரவல் தொடங்கி அங்கு மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டபோது நாளொன்றுக்கு 2.50 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர். பின்னர் இந்த எண்ணிக்கை குறைந்தது. கடந்த நவம்பர் மாதத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கும் சூழல் இருந்தது. பின்னர் 8 மாதங்கள் போராட்டத்துக்கு பிறகு தினசரி பாதிப்பு என்பது 10 ஆயிரம் என்ற அளவில் குறைந்தது.
இந்தநிலையில் தற்போது அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகப் பதிவு செய்யப்படும் கொரோனா தொற்றுகளில் 80%க்கும் மேல் டெல்டா வைரஸால் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தினால், விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பும் என அமெரிக்க அரசு எதிர்பார்த்தது. ஆனால், அங்கு டெல்டா வகை வைரஸ் தீவிரமாக பரவி அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.


அமெரிக்காவில் தற்போது நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக தெற்கு மாகாணங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மக்கள் கட்டுப்பாடுகளை மதிக்காமலும் முககவசம் அணியாமலும் இருப்பதே தொற்று உயர்வதற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் டெல்டா வைரஸ் பரவி மருத்துவ சுகாதார கட்டமைப்பை திணற வைத்துள்ளது.


டெக்சாஸ் மாகாணத்தில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். மருத்துவ கட்டமைப்பு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவு குறைந்துள்ளது. சிகிச்சை அளிப்பதற்கு செயற்கை சுவாச கருவிகளும் குறைவாகவே உள்ளன. ஆனால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் சில இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேகம் குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ள போதிலும் இதனை தீவிரப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் தற்போது கொரோனா 4ம் அலையில் சிறார்கள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் இடையே தொற்று அதிகரித்து வருவதாக மருத்துவத்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய தொற்றுநோய் தடுப்பு நிபுணர் டாக்டர் ஜேம்ஸ், ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக சிறார்கள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். டெல்டா வகை கிருமியால் அமெரிக்காவில் தற்போது 4வது அலை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. டெல்டா வகை வைரஸ் அதிதீவிரமாக பரவும் தன்மையுடையது.

தற்போது பாதிப்பு உள்ளாகி இருக்கும் சிறார்களின் 90% இந்த வைரஸால் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு வரும் தகவல்களும் அதனை உறுதி செய்கின்றன. எனவே பெரியவர்கள் மட்டுமல்ல சிரர்களிடமும் டெல்டா வகை வைரஸ் தொற்று அதிகம் காணப்படுகிறது என தெரிவித்தார். அமெரிக்காவில் ஒரே நாளில் 1,02,356 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடவில்லை என்றால் வேலை இல்லை என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப் பரிந்துரைத்திருக்கிறார் அந்நாட்டின் தொற்றுநோய் சிகிச்சை நிபுணரான மருத்துவர் ஆண்டனி பாஸி.