• Fri. Mar 29th, 2024

465 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க..!

ByA.Tamilselvan

Jan 18, 2023

தமிழகத்தில், ஆதி திராவிடர் நலத் துறைப் பள்ளிகளில் 465 தற்காலிக ஆசிரியர்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் நியமனம் செய்யப்படவுள்ளனர். எனவே, தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 1,400-க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு காலதாமதம் ஆவதால் மாணவர்கள் நலன் கருதி தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ‘ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகளில் 19 முதுநிலை ஆசிரியர்கள், 80 பட்டதாரி ஆசிரியர்கள், 366 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 465 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நேரடியாகவோ, அஞ்சல் வழியிலோ உரிய கல்விச் சான்றுகளுடன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியருக்கு, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களால் அனுப்பப்படும். இதைத் தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பணிகள் ஜன.20-ம் தேதிக்குள் முடிக்கப்படும். இடைநிலை ஆசிரியர்கள் பதவிக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்படும்’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *