• Tue. Oct 8th, 2024

சகோதரர்கள் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

தாயை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரத்தில் தொழிலாளியை அடித்து கொன்ற சகோதரர்கள் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் தீர்ப்பு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஓம்நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 43). தொழிலாளி. இவருடைய மனைவி ராசாத்தி . இவர்களுக்கு கவின் என்ற மகனும், காவியா என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில் மகேந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன்கள் புவனேஷ்வரன் (28) மற்றும் சதீஷ் (24) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்து உள்ளது. இந்நிலையில் மகேந்திரன் கடந்த 2018 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ந் தேதி எஸ்.கைகாட்டிக்கு சென்றார். அங்கு புவனேஷ்வரன், சதீஷ் மற்றும் இவர்களது நண்பரான பிரட்லீ என்ற நாகராஜ் (30) ஆகியோர் நின்றிருந்தனர். அப்போது இவர்களுக்கும், மகேந்திரனுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மகேந்திரன், சதீஷ் மற்றும் புவனேஸ்வரனின் தாயை குறித்து தவறாக பேசியதாக தெரிகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் இரும்பு கம்பியால் மகேந்திரனை தாக்கியுள்ளனர். குறிப்பாக அவரது ஆண் உறுப்பில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி காவல்த்துறையினர் புவனேஷ்வரன், சதீஷ், நாகராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி குற்றம் சாட்டப்பட்ட சகோதரர்களான சதீஷ், புவனேஸ்வரன், மற்றும் நாகராஜ் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 3 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நீதிபதி முருகன் உத்தரவிட்டார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *