ராஜபாளையம் அருகே ரேசன் அரிசி மூடை கடத்தலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உட்பட 3பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக, விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அய்யனார் கோவில் செல்லும் சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதியில், உணவுப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த வேனில் தலா 50 கிலோ எடையுள்ள 25 மூடை ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது. ரேசன் அரிசி மூடைகளை கடத்தி வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த சுடலைமணி (36), வரதன் (21) மற்றும் அரிசி ஆலை நடத்தி வரும் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த செந்தூர்பாண்டி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 25 மூடை ரேசன் அரிசி மற்றும் ரேசன் அரிசி மூடைகளை கடத்துவதற்கு பயன்படுத்திய வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த ரேசன் அரிசி மூடை கடத்தலில் ஈடுபட்ட சுடலைமணி என்பவர் தென்காசி மாவட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வருபவர் என்று தெரிய வந்தது.