• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உ.பி ரயில்வே தேர்வில் முறைகேடு செய்த 26 பேர் கைது- சிபிஐ அதிரடி!

ByP.Kavitha Kumar

Mar 5, 2025

உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே தேர்வில் முறைகேடு செய்த 9 அதிகாரிகள் உள்பட 26 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடியே 17 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், முகல்சாராயில் தலைமை லோகோ பைலட் பதவி உயர்வுக்கான துறை ரீதியான தேர்வு நேற்று (மார்ச் 4) நடைபெற இருந்தது. இந்த தேர்விற்கான வினாத்தாள்களை கசிய விடும் முயற்சியில் சிலர் ஈடுபட்டதாக சிபிஐ போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் முகல்சாராயில் இரண்டு நாட்களாக சிபிஐ அதிகாரிகள் மூன்று இடங்களில் சோதனை நடத்தினர்.

இதில் தற்போது லோகோ பைலட்டுக்களாக பணிபுரியும் 17 பேர் கையால் எழுதப்பட்ட வினாத்தாள் நகல்களுடன் பிடிபட்டனர். இவர்கள் பணம் கொடுத்து வினாத்தாள் வாங்கியதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் தேர்வு எழுத இருந்த 17 பேர் மற்றும் வினாத்தாள்களை வினியோகம் செய்த 9 ரயில்வே அதிகாரிகள் என 26 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த தேர்வை நடத்தும் பொறுப்பு அதிகாரியான, மண்டல முதுநிலை மின் பொறியாளர் (ஆபரேஷன்) மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தான் வினாத்தாளை தயாரிக்கும் அதிகாரி ஆவார். இவர் கைப்பட ஆங்கிலத்தில் வினாக்களை எழுதி ஒரு என்ஜின் டிரைவரிடம் கொடுத்துள்ளார். அந்த நபர் இந்தி மற்றும் வேறு சில மொழிகளிலும் வினாத்தாள்களை தயாரித்து மற்றவர்களுக்கு வினியோகம் செய்துள்ளார். இதனால் மண்டல முதுநிலை பொறியாளரும் கைது செய்யப்பட்டார்.

இந்த வினாத்தாள் மோசடி தொடர்பாக 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் 1 கோடியே 17 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த தொகை வினாத்தாள் விற்பனைக்காக வசூலிக்கப்பட்ட தொகை என்று தெரியவந்துள்ளது. இந்த மோசடி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.