• Tue. Feb 18th, 2025

விதிகளை மீறி கொண்டு சென்ற 2 லட்சம் பணம் பறிமுதல்

Byமகா

Feb 5, 2022

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கணேஷ்நகர் பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.2,10,110 பணம் பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக்கபட்டுள்ளன. முறையான ஆவணங்கள் இன்றி ரூ 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லப்படுவது தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டை கணேஷ்நகர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.பறக்கும் படை அதிகாரி திருக்கண்ண முனியாண்டி தலைமையில் காரியாபட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் கலைச்செல்வன் காவலர்கள் அருள்சேவியர்ராஜ் மற்றும் பாண்டீஸ்வரி ஆகியோர் கொண்ட பறக்கும்படை அதிகாரிகள் வாகனங்களில் ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்லப்படுகிறதா ஏதேனும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதித்ததில் அதில் முறையான ஆவணங்கள் இன்றி ரூ 2,10,110 பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் காரியாபட்டியை சேர்ந்த தனியார் நிறுவண ஊழியர்கள் விஜயகுமார்(37) , ஓட்டுநர் ராஜாராம்(22) ஆகியோர் திருச்சுழியில் நிறுவணத்தின் பணத்தை வசூல் செய்துவிட்டு அருப்புக்கோட்டை வழியாக மீண்டும் காரியாபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. எனினும் கொண்டு செல்லப்பட்ட பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ 2,10,110 பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.