• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் அருகே கி.பி 16 ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எழுத்துக்களுடன் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

ByA.Tamilselvan

Mar 6, 2023

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரடிகல் விவசாய நிலப் பகுதியில் 500 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துக்கள் கொண்ட நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரடிகல் பகுதியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் சுந்தர் என்பவர், தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக கொடுத்த தகவல்படி மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர், பேராசிரியர் முனைவர் து .முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் லட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன், ஆய்வாளர் ஆனந்தகுரமன் , ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியை மேற்பரப்பு கள ஆய்வு செய்தபோது ஊரில் மேற்கு பகுதியில் விவசாய நிலத்தில் மண்ணில் பாதி புதைந்த நிலையில் கி.பி.16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் வீரன் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் து முனீஸ்வரன் கூறியதாவது :

பேராசிரியர் முனைவர் து முனீஸ்வரன்


சங்க காலம் முதல் இன்றுவரை தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறை ஒரு முக்கிய பங்காக உள்ளது. நடுகல் என்பது போரில் இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் வீரம் பேசும் நினைவுக்கல். பெருநிரை ( பெருந்திரள் வீரர்களை) விலக்கி மாண்டு போன வீரனுக்காக எடுக்கப்படும் நினைவுக் கல்லாகும்.
நடுகல் சிற்பம்
கரடிகல் விவசாய நிலத்தில் கண்டறியப்பட்ட நடுகல் சிற்பம் 3 அடி உயரம், 2 அடி அகலம் 12 செ.மீ தடிமன் கொண்ட கருங்கல்லான தனி பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.வீரனின் உருவத்தை பொறுத்தமட்டில் முகம் தேய்ந்த நிலையில் ,இடது கையில் கேடயம் ஏந்தியவாறு, வலது கையை நீண்ட வாளை பிடித்தவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வலது புறம் சரிந்த கொண்டையானதை அள்ளி முடிக்கப்பட்டும், காதுகளில் காதணி, கழுத்தில் சரபளி சவடி, பதக்கம் போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் எனப்படும் வீர சங்கிலியும் காணப்படுகிறது. சன்னவீரம் என்பது போருக்கு செல்லும் வீரர்கள் அணிவதாகவும். வீரன் இடுப்பு பகுதியில் சலங்கை மற்றும் பதக்கம் கொண்ட அணிகலன்களும் , கை, கால்களிலும் வீரக்கழல் அணிந்து கொண்டு முன்னங்காலை ஊன்றி போருக்கு செல்வது போன்று நின்ற நிலையில் காணப்படுகிறது.


வீரன் வலதுபுறத்தில் பெண் சிற்பம் தேய்ந்த முகத்துடன் நீண்ட காதுகளில் அணிகலன் அணிந்து அலங்காரத்துடன் சரிந்த கொண்டையும் , உடல் முழுவதும் ஆடை அணிந்து வலது கை தொங்கவிட்டு இடது கை வீரனை பின் தொடர்ந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு செய்தி
சிற்பத்தின் மேல் பகுதியில் நீண்ட வடிவில் பெரிய எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு தேய்ந்த நிலை காணப்பட்டது .இக்கல்வெட்டை மை படி எடுத்து ஆய்வு செய்தபோது எழுத்துக்கள் தேய்மானத்தோடு காணப்பட்டதால் ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்களின் உதவியுடன் படிக்கப்பட்டது. இக்கல்வெட்டில் கடைசி வரி பெற்றான் என்ற வரி மட்டும் வாசிக்க முடிந்தது.மற்ற எழுத்துக்கள் தேய்மானம் கொண்டு இருப்பதால் பொருள் அறியமுடியவில்லை. கல்வெட்டின் எழுத்தமைதி பொறுத்து அதன் காலம் கி.பி 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்
இப்பகுதியில் போர்க்களத்தில் திறம்பட போரிட்டு இறந்த போர் வீரனின் நினைவை பறைசாற்றுவதற்காக எழுப்பட்ட நடுகல்லாக இருக்கலாம் . தற்போது மக்கள் வேட்டைக்காரன் சாமி என்று வழிபட்டு வருகின்றனர் என்றார்.