மயிலாடுதுறையில் சர்க்கரை ஆலையில் பணியாற்றும் ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 125 சவரன் நகைக்கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மங்கைமடம் அருகே பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வேந்திரன். அப்பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் வேலை செய்யும் செல்வேந்திரன், கடந்த திங்கட்கிழமை மகளின் பிரசவத்திற்காக மயிலாடுதுறைக்கு சென்றார். இந்த நிலையில், இன்று அதிகாலை அவர் வீடு திரும்பினார். வீட்டின் கதவைத் திறந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவருடைய வீட்டின் பின்பக்க கதவானது உடைந்து கிடந்தது. வீட்டிற்குள் அனைத்து பொருட்களும் சிதறிக்கிடந்தன. அத்துடன் அவர் பீரோவில் வைத்திருந்த 125 சவரன் நகையை கொள்ளையர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வேந்திரன், இதுகுறித்து திருவெண்காடு போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.