தமிழக அரசின் உத்தரவுப்படி நாளை முதல் வைகை அணையிலிருந்து மதுரை சிவகங்கை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 9-ஆம் தேதி பெரியாறு பிரதானக் கால்வாய் மூலம் மேலூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு முறை வைத்து நீர் திறக்கப்பட வேண்டும்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வைகை அணையில் ஆகஸ்ட் மாதங்களில் போதுமான நீர் இருப்பு இல்லாமல் இருந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்திற்கு ஆகஸ்ட் மாதங்களில் நீர் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு போதுமான பருவமழை பெய்தாலும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிகப்படியான நீர் திறந்து விடப்பட்டதால் இந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே வைகை அணை முழு கொள்ளளவை எட்டியது.
இதனையடுத்து வைகை அணையிலிருந்து முறை வைத்து நீர் திறக்கப்படும் பகுதிகள் அனைத்திற்கும் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மேலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு ஒரு போக பாசன பரப்பான 1.05 லட்சம் ஏக்கர் பாசன வசதிக்காக நாளை காலை 9.30 மணி முதல் அடுத்த 120 நாட்களுக்கு வினாடிக்கு 1130 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
இதன் மூலமாக மேலூரில் 85,563 ஏக்கர்,சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 136 கண்மாய்களுக்குட்பட்ட 6,748 ஏக்கர் மற்றும் பெரியாறு நீட்டிப்பு கால்வாய்கள் மூலம் 332 கண்மாய்களுக்குட்பட்ட 8 ஆயிரம் ஏக்கர் உட்பட பெரியாறு பிரதான கால்வாயில் 19,439 ஏக்கர் என மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு போக 1.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் வைகை அணையிலிருந்து ஆகஸ்ட் மாதத்திலேயே சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.