பாகிஸ்தானில் 182 பயணிகளுடன் கடத்தப்பட்ட ரயிலில் இருந்த 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 104 பிணைக்கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில், பலுச் விடுதலை அமைப்பினருக்கும், அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. பலுசிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்கக்கோரி பலுச் விடுதலை அமைப்பினர் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கி ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணியர் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. தாதர் என்ற இடத்தை அடைந்தபோது, ரயில் இன்ஜினுக்கு சில மீட்டர் துார இடைவெளியில் தண்டவாளத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் அந்த ரயிலை பலுச் விடுதலை அமைப்பினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் ரயில் இன்ஜின் ஓட்டுநர் உயிரிழந்தார். இதன்பின் ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகளை விடுவித்த அவர்கள், ராணுவவீரர்கள் உள்பட 182 பேரை சிறைபிடித்தனர்.
இந்த நிலையில், தகவல் அறிந்த ராணுவவீரர்கள் அந்த ரயிலை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதற்கு பலுச் விடுதலை அமைப்பினர் பதிலடி கொடுத்தனர். இதில் 16 தீவிரவாதிகளும், 30 ராணுவவீரர்களும் உயிரிழந்தனர். 104 பிணைக்கைதிகள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய பிணைக்கைதிகளை மீட்க தீவிரவாதிகளுடன், பாதுகாப்பு படையினர் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுளளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.