• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இந்தியா கோப்பை வெல்ல 1008 தேங்காய் உடைத்து வழிபாடு.., மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி கிளப் & அனுஷத்தின் அனுக்கிரகம்…

ByKalamegam Viswanathan

Nov 18, 2023

இந்தியாவில் நடந்து வரும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, உலகக் கோப்பையைக் கைப்பற்ற மதுரை மேலமாசி வீதி – வடக்கு மாசி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் 2023, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இறுதி போட்டியில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்ப‌ற்ற வேண்டி மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் இணைந்து வடக்கு மாசி மேல‌மாசி‌வீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோயிலில் விசேஷ பூஜை நடத்தப்பட்டது.

தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் போட்டோக்கள் மற்றும் உலக கோப்பை போட்டோ இடம் பெற்ற பெரிய பதாகையை வைத்து அர்ச்சனை செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட அனைத்து வீரர்களின் பெயர்களை தனித்தனியாக சொல்லி சிறப்பு அர்ச்சனையும் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ‘ஆல் த பெஸ்ட்’ இந்தியா என்ற கோஷம்‌ முழங்க 1008 தேங்காய் உடைத்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் மற்றும் ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் நெல்லை பாலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகானந்த‌பாண்டி, அத்வி மீடியா ஆதவன், விநாயகா இம்பெக்ஸ் மகேந்திரன், சுப்பிரமணியன், ஆர்.குமார், திருநகர் ரோட்டரி சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நியூசிலாந்து அணியுடன் ஆடிய அரையிறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி, ஏற்கனவே மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவர் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.